மூக்குத்தி அம்மன் 2 படத்தை இதனால்தான் இயக்கல.. உண்மை காரணத்தை கூறிய ஆர்ஜே பாலாஜி!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஸ்டைலிஷ், கவர்ச்சி, ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாராவை மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடிக்க வைத்து ரசிகர்களை மிரளவைத்தார் ஆர்ஜே பாலாஜி. இதுவரை அம்மன் படங்களுக்கு இருந்து டெம்ப்ளேட் அனைத்தையும் உடைத்து ரசிகர்கள் என்ஜாய் செய்யும் வகையில் செண்டிமெண்ட், காமெடி, பக்தி என படம் முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது. இந்த புது கோணத்தை ரசிகர்கள் வரவேற்றனர், ஸ்டைலிஷ் அம்மனாக களமிறங்கிய நயன்தாராவின் நடிப்பில் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியானது.
படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தான் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் சுந்தர் சி என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன் ஆர்ஜே பாலாஜி ‘மாசாணி அம்மன்’ என்ற பெயரில் த்ரிஷாவை அம்மனாக நடிக்கவைக்கவுள்ளார் என்று பல செய்திகள் வெளியானது, ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் அதுகுறித்து வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆர்ஜே பாலாஜியிடம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஏன் இயக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில்,
“மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க நான் Interested-ஆ இல்லை, அவங்க அந்த ஐடியால இருந்தாங்க. ஆனா எனக்கு அந்த படம் பண்ணும் ஐடியா இல்லை. அதனால வேற ஒரு இயக்குநரை வச்சு பண்றாங்க. மூக்குத்தி அம்மன் படம் இல்லன்னா நான் வேற ஏதாவது படம் பண்ணிக்குவேன், அது ஒன்னும் டைட்டானிக் இல்லை. மூக்குத்தி அம்மன் இல்லைன்னா மாசாணி அம்மன், அதுவும் இல்லைன்னா 108 அம்மன் பேரு அதுல ஒரு பெயரை வச்சு இயக்குவேன்” என்று பதிலளித்தார்.
மேலும் அவர் நடித்து வரும் படங்கள் குறித்து பேசுகையில், “நான் இப்போ சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன், அதே சமயம் நடிகை சூர்யாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது” என்று கூறினார்.